என் விடியலின்  முகவரி நீ
முடிவில்லா கனவின் 
முப்பரிமாணம் நீ.
இடையிடையே கொடியிடையில் 
எந்தன் கைப்பட்டு
நொடியில் மலர்ந்திடும் நீயொரு
பூஞ்சிட்டு.

எதுகை, மோனை நிறைந்த போதைக்கவிதை நீ.
பதுமையோ, பாவையோ,
பாரின் விந்தை நீ.
நடமாடும் பூந்தோட்டமாய்
அடிக்கடி இடம் மாறி
நயமாய் என்  மனதிலிடம்
பிடித்த சுகுமாரி.

இளமா மயிலே! 
இன்பத்துப் பாலுக்கப்பால்
நிற்கிறாயே.
இம்மாலையிலே 
இனந் தெரியாமல்
தவிக்க வைக்கிறாயே.
என்னென்னவோ மாற்றங்கள் இடைவெளியின்றி
நிகழ்கிறதே என்னுள்.
கண்ணெடுத்துப் பார் 
காதலில் தவிக்கிறதே முகநூல்.

காதலிலே விழுந்ததனால்
காலமெல்லாம் தவிக்கிறேன்.
கீதையும், வேதமும் 
பேதமின்றி ஓதுகிறேன்
கடற்கரையில் நடைக்கையிலே
மேனியெல்லாம் வியர்க்கிறேன்.
இடரின்றி வீசிடினும்
தென்றலையும் சபிக்கிறேன்.

காதலுக்கு புத்தம் புதிய
அர்த்தங்களை தேடுகிறேன்.
கண்ணே! உந்தன்
கடைக்கண் பார்வைக்காக 
வாடுகிறேன்.
தென்றல் வந்து உன்னை
தீண்டினாலும் கோபிக்கிறேன்.
திங்கள் ஒளியினிலே 
ஈரக்காதலை உலர்த்துகிறேன்.

வைகறைப்  பொழுதில் 
வீசிடும் தென்றல் நீ.
வண்ணத்துப்  பூச்சியின் 
நிறங்களை நிர்ணயிப்பவள் நீ.
கவிதைகளை உதிர்த்தவாறே
காலாற நடப்பவள் நீ.
ஆயக் கலைகளையும்
உன்பால் ஈர்ப்பவள் நீ.

2 تعليقات

إرسال تعليق

أحدث أقدم